பொதுமக்கள் குறைகேட்பு அமைப்பு - ஆலந்தூர் தொகுதி

திரு.தா.மோ.அன்பரசன் - வாழ்க்கை குறிப்பு

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம் வட்டம், தெய்வப் புலவர் சேக்கிழார் அவதரித்த குன்றத்தூரில் தா.மோ.அன்பரசன் அவர்கள் 1960-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் நாள் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் திரு.தா.மோகலிங்கம் - திருமதி.ராஜாமணி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.
இவர் பிறந்த கிராமம் மிகவும் பின் தங்கிய கிராமமாக இருந்தாலும் வளம் மிக்க விவசாயம் மற்றும் நெசவு தொழிலில் இக்கிராம மக்கள் அனைவரும் ஈடுபட்டு வந்தனர். தா.மோ.அன்பரசன் அவர்களும் நெசவாளர் குடும்பத்தை சார்ந்தவரே. இவர் பாபு என்று குடும்பத்தினரால் செல்லமாக அழைக்கப்படுவார்.
தா.மோ.அன்பரசன் அவர்கள் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப கலப்புப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை கல்வி பயின்றார். பின்னர் குன்றத்தூர் சேக்கிழார் உயர்நிலைபள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் S.S.L.C வகுப்பு வரை கல்வி பயின்றார். அதன் பிறகு மீனம்பாக்கத்தில் உள்ள A.M.ஜெயின் கல்லூரியில் புதுமுக வகுப்பு PUC பயின்றார்.
தா.மோ.அன்பரசன் அவர்கள் தனது தந்தையாருடன் இணைந்து இளமை பருவம் முதல் தி.மு.கழக வளர்ச்சிக்காக தீவிரமாக பணியாற்றி வந்தார். இவருடைய தந்தையை போல இவரும் அயராத உழைப்பால் தி.மு.க.வில் படிப்படியாக உயர்ந்தார்.
முதலில் இவர் 1985-ஆம் ஆண்டு முதல் 1988-ஆம் ஆண்டு வரை குன்றத்தூர் பேரூர் தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளராகவும், பின்னர் 1988-ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரை குன்றத்தூர் ஒன்றிய தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளராகவும் பணியாற்றினார்.
அதன் பின்னர் 1991-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு ஆண்டு வரை 10 ஆண்டுகள் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராகவும் இருந்து அனைவரும் போற்றி பாராட்டும் வகையில் மிகச் சிறப்பாக பணியாற்றினார்.
இளைஞர் அணி அமைப்பாளராக பணியாற்றிய போது 1993-ஆம் ஆண்டு கழகத்திற்கு சோதனை ஏற்பட்ட நேரத்தில், இவர் அச்சிறுப்பாக்கம் முதல் ஆலந்தூர் வரை ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலை வழிநெடுகிலும் அப்போது இளைஞர் அணி செயலாளராக இருந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை வைத்து கொடியேற்று விழா நிகழ்ச்சியை நடத்தியதன் மூலம் இவரது கடும் உழைப்பை கழகத்தினர் அனைவரும் அறிய முடிந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளராக 10 ஆண்டு காலம் இவர் ஆற்றிய அயராத உழைப்பாலும், அரும்பெரும் பணியாலும் உயர்ந்து, இவர் 2000-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று வரை கடந்த 16 ஆண்டுகளாக சிறப்பாக பணி ஆற்றி வருகிறார்.
தா.மோ.அன்பரசன் தாம் பிறந்த குன்றத்தூர் பேரூராட்சித் தலைவராக 1996-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இரண்டு முறை (10 ஆண்டுகள்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான முறையில் பணியாற்றினார் தம்முடைய ஊர் மக்களின் அன்பை பெற்றார்.
இவர் 2004-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை 2 ஆண்டுகள் சென்னை துறைமுக பொறுப்புக் குழு உறுப்பினராகவும் சீரிய முறையில் பணியாற்றினார்.
இவர் 2006-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு அ.தி.மு.க அமைச்சர் திருமதி.வளர்மதியை 17,910 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அத்துடன் இல்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிப் பெறச் செய்து சாதனை படைத்தார்.
2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் பொற்கால ஆட்சியை தந்த தலைவர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக திறம்பட செயல்பட்டார்.
அமைச்சராக இவரது கடுமையான உழைப்பு - திறமையான நிர்வாகம் காரணமாக தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் 5 ஆண்டுகளும் நிரந்தர வேலை நிறுத்தம் ஏதும் ஏற்படாமல் தடுத்து தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில், தொழில் அமைதி நிலவ செய்து தொழிலாளர்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்தது இவரது சாதனையாகும்.
2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்டு அ.தி.மு.க. சார்பில் எதிர்த்து நின்ற முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட்டு அ.தி.மு.க. சார்பில் எதிர்த்து நின்ற முன்னாள் அமைச்சர் வளர்மதியை 40,571 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தமிழக ஊரக தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
இவர் குன்றத்தூர் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளையில் தலைவராக தற்போது செயல்பட்டு வருகிறார். தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் சேக்கிழார் விழா நடத்தி குன்றத்தூரில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட ஏழை - எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெரும் மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குவது போன்ற பணிகளை தொய்வின்றி தொடர்ந்து செய்து வருகிறார்.



திரு.தா.மோ.அன்பரசன்
Minister of Rural Industries,
Cottage Industries, Small Industries &
Slum Clearance Board